பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரெளன் கல்வி, பொதுப் பணிகளில் ஆற்றிய பணிகளைப் பாராட்டி டெல்லி பல்கலைக் கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது.
குடியரசு துணைத் தலைவரும், டெல்லி பல்கலைக் கழகத்தின் வேந்தருமான ஹமீது அன்சாரி, பிரெளனுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பல்கலைக் கழகத் துணை வேந்தர் தீபக் பெயின்டால், மனித உரிமைகளுக்காக கார்டன் பிரெளன் ஆற்றிய சேவைகளைப் பாராட்டி இப்பட்டம் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
நாட்டிலேயே மிகச் சிறந்த பல்கலைக்கழகமான டெல்லி பல்கலைக்கழகம், தனக்கு டாக்டர் பட்டம் வழங்கியிருப்பதை மிகப்பெரிய பெருமையாகக் கருதுவதாக பிரெளன் தனது உரையில் கூறினார்.
சர்வதேசத் தரம்வாய்ந்த கல்வியைத் தங்கள் நாட்டு இளைஞர்களுக்கு வழங்குவதில் இந்தியாவும், பிரிட்டனும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.