Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'போலாரிஸ்' வெற்றிகரமாக செலுத்தப்பட்டது!

'போலாரிஸ்' வெற்றிகரமாக செலுத்தப்பட்டது!
, திங்கள், 21 ஜனவரி 2008 (13:15 IST)
இஸ்ரேல் நாட்டுச் செயற்கைக் கோளான 'போலாரிஸ்', நமது துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் (பி.எஸ்.எல்.வி.) மூலம் புவி சுழற்சிப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

காலை 9.17 மணிக்கு 'போலாரிஸ்' ஐத் தாங்கிக்கொண்டு, ஸ்ரீ ஹரிகோட்டாவிலுள்ள சத்தீஷ் தவான் மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

வர்த்தரீதியாக நமது ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் இரண்டாவது செயற்கைக் கோள் 'போலாரிஸ்' ஆகும். ஏற்கெனவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இத்தாலி நாட்டுச் செயற்கைக் கோளான 'அஜைல்' பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

'போலாரிஸ்' செயற்கைக் கோள் 300 கிலோ எடை கொண்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே இதை விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், தொழில்நுட்பக் காரணங்களால் தாமதம் ஏற்பட்டது.

'போலாரிஸ்' ஐ விண்ணுக்குக் கொண்டு சென்றுள்ள பி.எஸ்.எல்.வி. ராக்கெட் முழுவதும் இந்தியத் தயாரிப்பாகும். 295 டன் எடையும், 44 மீட்டர் நீளமும் கொண்டுள்ள இந்த ராக்கெட் 1,200 கிலோ எடை கொண்ட செய்ற்கைக் கோளைத் தாங்கிச் செல்லும் வல்லமை படைத்தது.

முன்னதாக 'போலாரிஸ்' செயற்கைக் கோள் ஏவும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ரகசியமாக வைத்திருந்தது. ஏவுதளத்திற்கு செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் உளவுச் செயற்கைக் கோளுக்குத் தடையில்லை!

அமெரிக்காவின் வற்புறுத்தலால் இஸ்ரேலின் உளவுச் செயற்கைக் கோளை ஏவும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இஸ்ரோ அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

"சில தொழில்நுட்பக் கோளாறுகளால் சிக்கலைச் சந்தித்துள்ளோம். அவை சரிசெய்யப்பட்ட பிறகு நிச்சயமாக அந்த செயற்கைக் கோள் ஏவப்படும்" என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார்.

இப்போது விண்ணில் செலுத்தப்பட்டுள்ள 'போலாரிஸ்' புவியில் உள்ள நிலைகளைத் துல்லியமாகப் படமெடுக்கும் கருவிகளைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் தொலையுணர்வு செயற்கைக் கோள்களைவிட பல மடங்கு துல்லியமான படங்களை எடுக்கும் திறன் 'போலாரிஸ்' செயற்கைக் கோளுக்கு உள்ளது. இப்படங்கள் ராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் விண்ணில் செலுத்திய ஓஃபெக்-7 செயற்கைக் கோளுக்கு அருகில் 'போலாரிஸ்' நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவும் இஸ்ரேலும் மேற்கொண்டுள்ள ராணுவ ஒத்துழைப்புகளுக்கு இந்தச் செயற்கைக் கோள் மிகவும் உதவும் என்றும், இதன் தொடர்ச்சியாக விண்வெளித் திட்டங்களில் ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்படும் என்றும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil