மராட்டிய மாநிலம் நாசிக்கில் பக்தர்களை ஏற்றிவந்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
இவ்விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 36 பேருக்கும் நாசிக் மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்றிரவு, நாசிக் மாவட்டம் டின்டோரி நகருக்கு அருகில் சப்தசிரிங் கார்க் மலையில் உள்ள கோவிலுக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 500 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது.
இதுகுறித்துத் தகவலறிந்ததும் விரைந்து வந்த காவலர்களும் மீட்புக் குழுவினரும் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர். இருந்தாலும், நிகழ்விடத்திலேயே 4 சிறுவர்கள் உள்பட 36 பேர் பலியாயினர்.
இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 3 பேர் இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் மும்பை, அதன் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.