நமது நாடு முழுவதும் ஓடும் பயணிகளில் இரயில்களில் தற்போது இருக்கும் துர்நாற்றம் மிகுந்த கழிப்பறைகளுக்கு பதிலாக, சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகையில் நவீன கழிப்பறைகளை (கிரீன் டாய்லெட்) அமைக்க இரயில்வே முடிவு செய்திருக்கிறது.
இரயில் கழிப்பறைகளின் தனிப் பண்பாக துர்நாற்றம் உள்ளதுடன், கழிவுகள் விழுவதால் தண்டவாளங்கள்,அவற்றின் இணைப்புகள் மிக விரைவிலேயே துருப்பிடித்துக் கெட்டுப் போகின்றன. இதனால் பராமரிப்புச் செலவு அதிகமாகிறது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இரயில்வே புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இரயில்களில் தற்போது இருக்கும் இரயில் பாதைகளிலேயே (இரயில் நிலையமாக இருந்தாலும்) கழிவுகளைக் கொட்டும் வகையிலான கழிப்பறைகளை ஒழிப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக கிரீன் டாய்லெட் என்படும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத கழிவறைகளை அமைக்க இரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக மூன்று வகையான கழிவறை மாதிரிகளை இரயில்வே பரிசீலித்து வருகிறது.
முதலில் கட்டுப்படுத்தப்பட்ட வெளியேற்றும் முறையிலான கழிப்பறைகள் ஏற்கெனவே சில இரயில் பெட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதன்படி, இரயில் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சென்றால் மட்டுமே கழிவறையிலிருக்கும் கழிவுகள் இரயில்பாதைகளில் வெளியேறும். இதனால், இரயில் நிலையங்கள், அதன் சுற்றுப்புறங்கள் அசுத்தமாக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது.
இரண்டாவதாக, விமானங்களில் இருப்பது போன்ற கழிவறைகளை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. இதன்படி, கழிவறைகளில் வெற்றிட முறைப்படி உறிஞ்சப்படும் கழிவுகள் அதற்கான தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு, பின்னர் இரயில் நிலையங்களில அமைக்கப்படும் தொட்டிகளில் கொட்டப்படும்.
மூன்றாவது முறையில் கழிவுகளை மக்கிப் போகச் செய்யும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகையிலான கழிவறைகளை பரிசோதனை முறையில் அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டிருக்கிறது.
உலகிலேயே மிகப்பெரிய இரயில்வே துறையைக் கொண்டிருக்கும் இந்தியாவில் நாள்தோறும் சுமார் 8 ஆயிரம் இரயில்கள் ஓடுகின்றன. இதில் சுமார் 1.6 கோடி பேர் பயணம் செய்கின்றனர். இதனால் இரயில்பாதைகளில் 3 லட்சம் லிட்டர் மனிதக் கழிவுகள் கொட்டப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.