முக்கியச் சாலைகளில் நடைபாதைகளை ஒழுங்குபடுத்துவதுடன், சைக்கிள் ஓட்டுவோருக்கு தனிவழி வசதியையும் ஏற்படுத்தித் தருமாறு தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர் எம்.ராமச்சந்திரன் அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை செயலர்களுக்கு அண்மையில் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை போன்ற வாகனப் போக்குவரத்து வேகமாக அதிகரித்துவரும் பல நகரங்களில் சாலை விபத்துகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுப்பதற்காக மத்திய அரசு உருவாக்கிய 2006-ஆம் ஆண்டு நகர்ப்புற போக்குவரத்துக் கொள்கையின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில், நகர்ப்புற போக்குவரத்தை சீரமைப்பதற்கான திட்டங்களை அளிக்குமாறு மாநில அரசுகளிடம் மத்திய அரசு ஏற்கெனவே கேட்டிருந்தது.
இதன் தொடர் நடவடிக்கையாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர் எம்.ராமச்சந்திரன் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளுக்கு ஜனவரி 2-ஆம் தேதி அனுப்பிய கடித விவரம் வருமாறு:
மேம்பாலங்கள் உள்ளிட்ட சாலைப் போக்குவரத்து வசதிகளை மேற்கொள்ளும் போது பாதசாரிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய திட்டங்களை நிறைவேற்றும் போது அந்தந்தப் பகுதிகளில் சாலைகளை தேவையான அளவுக்கு அகலப்படுத்தி நடைபாதைகள் அமைக்க வேண்டும்.
சைக்கிள்கள் செல்வதற்கான பிரத்யேக பாதைகளை அமைப்பது அவசியம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் மோட்டார் இல்லாத வாகனங்களின் போக்குவரத்தை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை அவசியம். மேலும் முக்கிய சாலைகளில் வாகனங்கள் அதிகபட்சமாக 30 கிலோ மீட்டர் வேகத்துக்குள்ளாக செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
இதேபோல பேருந்துப் போக்குவரத்தையும் முறைப்படுத்த வேண்டும். சாலைகளில் இடது ஓரத்தை பேருந்துகள் மட்டும் செல்வதற்கான பிரத்யேக பகுதியாக அறிவிக்க வேண்டும்.
தகவல் தொழிநுட்ப நகரங்கள், துணை நகரங்கள் உள்ளிட்ட புதிய நகரங்களை அமைக்கும் போதும் இந்த அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டும். இதற்கு தேவையான திட்டங்களை உருவாக்கி மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு எம்.ராமச்சந்திரன் தனது கடிதத்தில் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.