திரைப்படங்களில் விலங்குகளைத் துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் எச்சரித்துள்ளது.
இந்திய விலங்குகள் நலவாரியத்தின் 35-வது பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதையொட்டி வாரியத் தலைவர் ஜெனரல் டாக்டர் கார்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
விலங்குகள் நலனுக்காக மத்திய அரசு நான்கு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விலங்குகளுக்கு தங்குமிடம், கருத்தடை, ஆம்புலன்ஸ் சேவை மற்றும் இயற்கை பேரிடர்களிலிருந்து பாதுகாப்பு ஆகியவையே அந்தத் திட்டங்கள். இந்த நலத் திட்டங்களுக்கான நிதியுதவியை மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மத்திய விலங்குகள் நல வாரியம் மூலம் வழங்கி வருகிறது.
கடந்த 26 டிசம்பர் 2007 வரை விலங்குகள் நலத்திட்டங்களுக்காக ரூ.5.60 கோடி வழங்கப்பட்டுள்ளன. இதில் விலங்குகளுக்கு தங்கும் இடம் கட்டுவதற்காக 28 விலங்குகள் நல அமைப்புகள் மூலம் சுமார் ரூ.2.91 கோடியும், 39,022 விலங்குகள் கருத்தடை அறுவைச் சிகிச்சைக்காக ரூ.1.50 கோடியும், ஆம்புலன்ஸ் சேவைக்காக ரூ.1.10 கோடியும், இயற்கை பேரிடர் நிவாரணமாக ரூ.9 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர கடந்த 2007-08-ம் ஆண்டில் திட்டச் செலவுக்காக ரூ.5.11 கோடி வாரியத்திற்கு கிடைத்துள்ளது. இதில் 26 டிசம்பர் 2007 வரை 478 விலங்குகள் நல அமைப்புகளுக்கு ரூ.2.79 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2007-08-ம் ஆண்டில் 55 புதிய விலங்குகள் நல அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், விலங்குகள் நல அமைப்புகள் ஒத்துழைப்புடன் விலங்குகள் நல இயக்கம் துவங்கப்படவுள்ளது. இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளும் தன்னார்வமுள்ள பொது மக்களும் இதில் பங்கேற்க வகை செய்யப்படும்.
திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் விலங்குகள் சித்திரவதை செய்யப்படுவதைத் தடுப்பதில் வாரியம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 2007-08-ம் ஆண்டில் 347 திரைப்படங்களுக்கு படமாக்குவதற்கு முந்தைய அனுமதியும் 349 திரைப்படங்களுக்கு தடையில்லா சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. விலங்குகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு 388 கவுரவ விலங்குகள் நல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்வதிலும் தடுப்பூசி போடுவதிலும் வாரியம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதோடு வெறிநாய் கடியிலிருந்தும் பொது மக்களை பாதுகாக்க முடியும்.
பசுக்கள் தங்கும் கொட்டகைகளை (கோசாலாக்கள்) நவீனப்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வாரியம் முயற்சிகளை எடுத்து வருகிறது. இதையட்டி பயோ-கேஸ் உற்பத்தி, எரிபொருளுக்காக மீத்தேன்வாயு தயாரிப்பு, மீன் உற்பத்தி, வெர்மி-கம்போஸ்ட் தயாரிப்பு, பயோ-பெஸ்டிசைட்ஸ் மூலிகைத் தாவரங்கள் வளர்ப்பு ஆகியவற்றில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு மேஜர் ஜெனரல் ஆர்.எம்.கார்ப் கூறினார்.