கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட கலவரத்தின்போது வன்முறையாளர்களால் கற்பழிக்கப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் என மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!
குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி விரைவு ரயில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதில் 59 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரத்தின் போது தனது குடும்பத்தினர் 16 பேருடன் சபர்வாத் என்ற இடத்தில் இருந்து பானிவேலா என்ற இடத்தை நோக்கி பில்கி பானு குடும்பத்தினர் பயணம் செய்தபோது வன்முறையாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டனர்.
அப்பொழுது 6 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு வன்முறையாளர்களால் கற்பழிக்கப்பட்டார். பானுவும், அவருடைய 2 குழந்தைகள் மட்டுமே உயிர் தப்பினர். மற்ற அனைவரும் கொல்லப்பட்டனர்.
இவ்வழக்கு குஜராத்தில் நடைபெற்ற போது பில்கிஸ் பானு மிரட்டப்பட்டதால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து மும்பைக்கு மாற்றப்பட்டது. வழக்கு குறித்த புலனாய்வை மத்திய புலனாய்வுக் கழகம் மேற்கொண்டது.
இவ்வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி யு.டி. சால்வி இன்று தீர்ப்பளித்தார். பில்கி பானுவை கற்பழித்தது, அவருடைய குடும்பத்தினரை கொலை செய்தது உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 12 பேரை குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஜஸ்வந்திபாய் நை, கோவிந்த்பாய் நை, சைலேஷ் பட், ராதீஷாம் ஷா, பிபின் ஜோஷி, கேசர்பாய் கோகானியா, பிரதீப் மோர்தியா, பாஹாபாய் வோஹானியா, ராஜன்பாய் சோனி, நித்தேஷ் பட், ரமேஷ் சந்தனா ஆகியோர் இந்திய தண்டனைவியல் சட்டம் 302 (கொலை), 120 பி (சதித் திட்டம்), 149 (குற்றம் செய்யும் நோக்குடன் ஒன்று கூடியது), 376 (2) (இ) (ஜி) (கர்ப்பிணியை வன்புனர்ச்சி செய்தல்) ஆகிய குற்றங்கள் புரிந்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்த நீதிபதி, பில்கிஸ் பானுவின் மகள் சலீகாவை ஜந்வந்திபாயும், கோவிந்த்பாயும் கொன்றது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இவர்களுக்கு வரும் திங்கட்கிழமை 21 ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.