கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்பில் முரண்பாடுகளுக்கான வலுவான காரணமில்லாமல் அவை விடுதலை செய்து வழங்கும் தீர்ப்பில் உயர் நீதிமன்றங்கள் தலையிட வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
விடுதலை செய்யப்பட்டவருக்கு எதிராக உயர் நீதிமன்றங்களில் தொடரப்படும் மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் முன், விசாரணை நீதிமன்றங்கள் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சி ஆதாரங்களை சரியாக புரிந்து கொண்டுள்ளதா, சாட்சிகளை சரிவரக் கையாண்டுள்ளதா என்பதையெல்லாம் தீர்ப்புகளைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் முரண்பாடுகள் இருப்பதற்கான வலுவான காரணம் இருக்கும் நிலையில் மட்டுமே மேற்கண்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மும்பை உயர் நீதிமன்றம் 5 பேருக்கு வழங்கிய ஆயுள் தண்டணையை இரத்து செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.பி.மாத்தூர், ஆர்.வி.இரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கும் போது மேற்கண்ட அறிவுறுத்தலை உயர் நீதிமன்றங்களுக்கு வழங்கினர். சாட்சி ஆதாரங்களை முறையான ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணை நீதிமன்றங்கள் எடுக்கும் சரியான முடிவுகளுக்கு உயர் நீதிமன்றங்கள் மதிப்பளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
வழக்கில் தொடர்புடைய ஒட்டுமொத்த சாட்சி ஆதாரங்களையும் மறு ஆய்வு செய்வதுடன் உயர் நீதிமன்றங்கள் சொந்த முடிவுக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளனர். வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சாட்சி ஆதாரங்களைப் பொறுத்த மட்டில் இரண்டு வகையான பார்வைகள் ஏற்படும்.
குற்றம் சாற்றப்பட்டவருக்கு ஆதரவான நிலை ஒன்று, மற்றொன்று எதிர் நிலை. உயர் நீதி மன்றங்கள், தாங்கள் இந்த வழக்கை விசாரிப்பதலாலே விடுதலை செய்யப் பட்டவருக்கு எதிரான திர்ப்பைத் தான் வழங்க வேண்டும் என்று கருதக் கூடாது எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.