இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்த முயற்சி எடுக்கப்படுமானால், மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்துவரும் ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கு தயங்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் கூறியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும் கேரள முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் அயலுறவுக் கொள்கைகளுக்கும், நலனுக்கும் எதிரானது என்று நாங்கள் தொடக்கத்தில் இருந்தே கூறி வருகிறோம்.
தன்னுடைய இளைய கூட்டாளியாகவும், ராணுவ முகாமாகவும் இந்தியாவை மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது. அதை என்ன விலை கொடுத்தாலும் அனுமதிக்க மாட்டோம்.
இதை மீறி அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்துவரும் ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கு தயங்க மாட்டோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, ஐ.மு.கூ. - இடதுசாரிகள் உயர்மட்டக் குழுவில் விவாதிக்காமல் சர்வதேச அணுசக்தி முகமையுடன் எந்தவிதமான ஒப்பந்தத்தையும் மேற்கொள்ள மாட்டோம் என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அவ்வாறு ஏதாவது ஒப்பந்தம் மேற்கொண்டால் ஆதரவைத் திரும்பப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.