'தலித்' என்ற வார்த்தை சட்டவிரோதமானது என்பதால் அதை அரசு ஆவணங்களில் பயன்படுத்த வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நமது நாடு முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த மக்களை நாம் பொதுவாக 'தலித்' என்றே அழைத்து வருகிறோம். அரசு ஆவணங்களில் கூட, தாழ்த்தப்பட்டோர் என்றே குறிப்பிட வேண்டும் என்ற விதி இருந்தாலும், வசதி கருதி 'தலித்' என்றே குறிப்பிடப்படுகிறது.
ஆனால், அந்த வார்த்தை சமத்துவத்தை பாதிக்கிறது என்றும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் பரவலாகக் குற்றச்சாற்றுகள் எழுந்தன.
இதையடுத்து, அரசு ஆவணங்களில் 'தலித்' என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என்று எல்லா மாநில அரசுகளுக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், அரசியல் சட்டத்தின் 341வது பிரிவின்படி 'தலித்' என்று சொல்லக் கூடாது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பல மாதங்களுக்கு முன்பே, 'தலித்' என்ற சொல்லைப் பயன்பாட்டில் இருந்து நீக்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.