ஆண்டுதோறும் ஒரு லட்சம் உடல் ஊனமுற்றோர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சலுகைகளை அளிக்க ஆயிரத்து 800 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
மாநில அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகள் வெகுவாக குறைந்து வருவதால், உடல் ஊனமுற்றோருக்கும் போதிய வேலைவாய்ப்பு இல்லை. இந்தநிலையை போக்க மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. காப்பீடு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றில் சலுகைகளை அளித்து, தனியார் நிறுவனங்களில் உடல் ஊனமுற்றோருக்கு அதிகளவில் வேலை வாய்ப்பை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.
நாட்டின் பொருளாதார நிலை குறித்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு மத்திய தகவல், தொலைதொடர்புத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், அரசுத்துறைகளில் கடந்த சில ஆண்டுகளாகவே வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. எனினும், உடல் ஊனமுற்றோருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பது அவசியம். பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்கனவே பல்வேறு சலுகைகளை அளித்து வருவதால், தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஆண்டுதோறும் ஒரு லட்சம் உடல் ஊனமுற்றோர் வேலை வாய்ப்பு பெறும் வகையில், தனியார் நிறு௦வனங்களுக்கு சலுகைகள் வழங்க 11வது ஐந்தாண்டு திட்டத்தில் ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இச்சலுகை முதல் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும்' என்று அவர் கூறினார்.