மேற்கு வங்க மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவியுள்ளதைத் தொடர்ந்து அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், நிலைமையை ஆராயவும் மத்திய அரசு உயர் மட்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழு தனது பணியை இன்று முதல் துவங்குகிறது.
மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள 105 கிராமங்களில், ஏற்கெனவே அம்மாநில கால்நடை மேம்பாட்டுத் துறை 55 குழுக்களை இப்பணியில் ஈடுபடுத்தியுள்ளது. பறவைக் காய்ச்சல் நோய் பிர்பூம், தெற்கு தீனாஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் முதலில் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து முர்ஷிதாபாத் மாவட்டத்திற்கும் பரவியுள்ளது.
பறவைக் காய்ச்சல் நோய் பரவியதைத் தொடர்ந்து பிர்பூம் மாவட்டத்தில் 3.5 லட்சம் கோழிகளும், தெற்கு தீனாஜ்பூர் மாவட்டத்தில் 26,000 கோழிகளும் அழிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் அனுசூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாநில அரசை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த பறவைக் காய்ச்சல் நோய்க்கு இதுவரை மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் மத்திய அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முதலே மேற்கு வங்க மாநிலம், வங்கதேசம் எல்லைப் பகுதியை மூடியதோடு தீவிர கண்காணிப்பு தொடர்ந்து வருகிறது. இதனிடையே வடகிழக்கு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.