இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனத் தலைமை விரும்புவதாகவும், இது இரு நாடுகளிடையேயான இராணுவ நடவடிக்கை தொடர்பான கொள்கை, நடவடிக்கைகளில் மிகுந்த மன நிறைவையும், ஆழமான உறவையும் வெளிப்படுத்துவதாக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
தமது சீனப் பயணம் வெற்றியடைந்து உள்ளதாகவும், சீன அதிபருடனான சந்திப்பின் போது வெளிப்படையான நிலையும், அதேநேரத்தில் நம்பிக்கை உணர்வும் மேலோங்கி காணப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் இந்தியா உறுப்பினராவது தொடர்பான சீனாவின் நிலைப்பாடு தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள பிரதமர், இது தொடர்பாக சீன அரசு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள அறிக்கையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகள் முந்தைய அதன் நிலைப்பாட்டில் இருந்து சற்று மேம்பாடு அடைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த பயணத்தின் மூலம் நாம் எதிர்பார்த்த பலனில் முன்னேற்றம் அடைந்திருப்பதாக கூறியுள்ளார்.
விரிவுப்படுத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் இந்தியா உறுப்பினராவதில் அவர்களுக்கு உடன்பாடு இருப்பது, அவர்கள் இது தொடர்பாக கூறியதில் இருந்து தாம் நினைப்பதாக பிரதமர் கூறியுள்ளார். இது ஒரு நல்ல முன்னேற்றம் என்றும் குறிப்பிட்டுள்ளார். சீனப் பயணம் தொடர்பாக இடதுசாரிக் கட்சிகளுக்கு எடுத்துக் கூறுவீர்களா என்ற கேள்விக்கு, தாம் இதனை எப்போதுமே செய்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பு உறவுகளை பொறுத்த மட்டில், உறவை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை, பயணங்களை இரு நாட்டு அயலுறவுத் துறையும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தீவிரவாதத்தைப் பொறுத்தமட்டில் அண்டை நாடுகளுடன் விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலையை இந்தியா கண்காணித்து வருவதாகவும், இந்தியாவைப் பொறுத்தமட்டில் பாகிஸ்தான் வலிமையான, நிரந்தரமான, நவீன பாகிஸ்தானாக மாறவேண்டும் என்பதுதான் விருப்பம், அதுவே தான் ஆசிய நாடுகளின் விருப்பமாகவும் உள்ளது என பிரதமர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தொடர்பாக இந்தியாவின் கவலையையும், பாகிஸ்தானின் பிரச்சனையையும் அதிபர் உணர்ந்துள்ளதாகவும், இப்பிரச்சனைத் தொடர்பாக இந்தியாவும், சீனாவும் ஒருவருக்கொருவர் அடிக்கடித் தொடர்பு கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் சீன அதிபர் உணர்ந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சனை குறித்து விவாதித்ததாகவும், இரு தரப்பு நிலைப்பாடு குறித்தும் நன்கு அறிந்த நிலையில், இறுதி முடிவு ஏற்படும் வரையில் முன்னாள் பிரதமர்கள் ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய் சீனா வந்த போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருநாட்டு எல்லைப் பகுதியிலும் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் உறுதியேற்றுள்ளதாகவும் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.