கொல்கட்டா புராபஜார் பகுதியில் 13 மாடிக் கட்டடத்தில் இயங்கிவரும் நந்தாராம் வணிக வளாகத்தில் பிடித்த தீ 3 ஆவது நாளாக இன்றும் கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.
ஏறக்குறைய அந்தக் கட்டடத்தின் எல்லா மாடிகளும் எரிந்து சாம்பலாகி விட்ட நிலையில், 12 வது மாடியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள டீசல் பேரல்களைக் காப்பாற்றும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
ஆனால் நேற்று மாலை டீசல் பேரல்கள் வெடித்துச் சிதறியது. இதனால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குத் தீ பரவியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
வெடித்துச் சிதறும் கண்ணாடி ஜன்னல்களும், கரும்புகையும் தீயணைப்பு முயற்சிகளுக்குத் தடையாக உள்ளன. இதற்கிடையில், கடந்த 2 நாட்களாக இருந்து வந்த தண்ணீர்த் தட்டுப்பாடு தற்போது தீர்ந்து விட்டது.
இதற்கிடையில், தீ எரிந்துவரும் கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் என்ற செய்தியை, அக்கட்டடத்தின் பொறியாளர்கள் மறுத்துள்ளனர். கட்டடம் இடிவதற்கு வாய்ப்பில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ராணுவத்தினரும், தீயணைப்பு வீரர்களும் இணைந்து இன்று மாலைக்குள், தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவார்கள் என்று நம்புவதாக கொல்கட்டா காவல் துறை ஆணையர் கெளதம் மேனன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.
இந்த வணிக வளாகம் இந்தியாவிலேயே மிகப்பெரிய மொத்த விற்பனை மையம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இங்கிருந்த 4,000 கடைகளும் எரிந்து சாம்பலாகிவிட்டன. மொத்த சேத மதிப்பு ரூ.200 கோடியைத் தாண்டியிருக்கும் என்று கருதப்படுகிறது.