பொங்கல், மகர சங்கராந்தியை முன்னிட்டு, குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை மிகவும் மகிழ்ச்சித் தரும் பண்டிகையாகும். நம்மிடையே சகோதரத்துவத்தையும் அன்பையும் வளர்த்து, ஒற்றுமையோடு நாட்டு முன்னேற்றத்துக்குப் பாடுபட இந்த பண்டிகை நமக்கு உதவுகிறது என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார்.
அறுவடைக் காலத்தை ஒவ்வொரு மாநிலத்திலும் பல விதமாகக் கொண்டாடுகின்றனர். இந்த விழாக்கள் நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் மேன்மையை உணர்த்துகின்றன என்று குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
பண்டிகைகள் நமது கலாசாரத்தை பிரதிபலிக்கின்றன. முன்னேற்றம் மற்றும் வளத்துக்கு அவை உறுதி அளிக்கின்றன. நாட்டு மக்களுக்கு இந்த நல்ல நாளில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.