கொல்கட்டாவில் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பாரபஜார் பகுதியில் நேற்று பற்றிய தீ இன்றும் தொடர்ந்து எரிந்து வருகிறது. தீயணைக்கும் பணி ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 4,000 கடைகள் எரிந்து சாம்பலாகி விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்கட்டாவின் மையப் பகுதியில் வர்த்தக நிறுவனங்களும், மொத்த விற்பனைக் கடைகளும் நிறைந்த பகுதி பாரபஜார். இங்குள்ள வீடு ஒன்றில் நேற்று அதிகாலையில் பிடித்த தீ, அருகில் உள்ள அடுக்குமாடிக் கட்டடங்களுக்கும் பரவியது. சுமார் 4 அடுக்குமாடிக் கட்டடங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.
தகவலறிந்ததும், 40 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களின் முயற்சிகள் அனைத்தும் வீணானது.
அடுக்குமாடிக் கட்டடங்களில் 10 முதல் 14 ஆவது மாடி வரை தண்ணீரைக் கொண்டுசெல்ல முடியவில்லை. இதனால் மளமளவெனப் பரவிய தீ, இன்று அருகில் உள்ள நந்தாராம் வணிக வளாகத்திலும் பற்றியது.
இதையடுத்து ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரைக் கொண்டுவந்து தீயை அணைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. எண்ணையில் தீ பற்றினால் அணைக்கப் பயன்படும் நுரை, கார்பன் டை ஆக்சைடு தூள் உள்ளிட்ட பொருட்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தீயை அணைப்பதற்கு தேவையான தண்ணீர் கிடைக்காததால் தீயணைப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தீயை அணைக்கப் போராடி வரும் வீரர்கள் புகார் தெரிவித்தனர்.
இதனிடையே, நந்தாராம் வளாகத்தின் 12 ஆவது மாடியில் உள்ள ஜெனரேட்டர் அறையில் ஏராளமான டீசல் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால் அது வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காதைப் பிளக்கும் சத்தத்துடன், கண்ணாடி ஜன்னல்கள் தெறித்து விழுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.