இந்திய- சீன எல்லைப் பிரச்சனை, இருநாடுகளுக்கும் இடையில் ஓடும் நதிநீர்ப் பகிர்வுப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து சீனத் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக சீனாவுக்கு சனிக்கிழமை இரவு புறப்படுவதற்கு முன்பு டெல்லியில் அவர் அளித்த பேட்டி:
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நல்லுறவு தற்போது மிகவும் வலுவடைந்து வருகிறது. பிராந்திய, உலகளாவிய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேலும் வலுவூட்டும் வகையில் இந்தியாவும் சீனாவும் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து செயல்படும். இது பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் அடைந்து வரும் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.
எல்லைப் பிரச்சனை, நதிநீர்ப் பகிர்வுப் பிரச்சனை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்பட பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்து சீன தலைவர்களுடன் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளேன்.
பல்வேறு விடயங்களில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது, பரஸ்பரம் பலனளிக்கும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களில் ஒத்துழைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, கலாசாரம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு, இரு நாட்டு மக்களுக்கு இடையேயான நேரடித் தொடர்பை வலுப்படுத்துவது உள்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் விவாதிக்க உள்ளேன்.
சீன அதிபர் ஹு ஜிந்தாவோ, கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு வந்தபோது, இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர உறவு வலுப்பெற 10 அம்சத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரலில் சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ, இந்தியாவுக்கு வந்தபோது இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு அமைதியான வழியில் தீர்வு காண்பதற்கு அடிகோலப்பட்டது. தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவுடனான உறவை வலுப்படுத்திக் கொள்வதில் இந்தியா எப்போதுமே முன்னுரிமை அளித்து வருகிறது என்றார் மன்மோகன் சிங்.
சீன பிரதமர் விருந்து!
ஞாயிற்றுக்கிழமை இரவு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சீனப் பிரதமர் வென் ஜியாபாவ் விருந்தளிக்கிறார். விருந்துக்கு முன்பு இருவரும் தனியே சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். திங்கள்கிழமை காலை இரு பிரதமர்களும் தங்களது அதிகாரிகள், தொழிலதிபர்கள் குழுக்களுடன் பேச்சு நடத்துகின்றனர். சீன அதிபர் ஹு ஜிந்தாவோ மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவர் வூ பங்கூவா இருவரையும் பிரதமர் மன்மோகன் சந்தித்துப் பேசுவார்.