மத்தியக் கொல்கட்டாவில் பாராபஜார் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 2,500 க்கும் மேற்பட்ட கடைகளும், 7 அடுக்குமாடிக் கட்டடங்களும் எரிந்து சாம்பலாயின.
கொல்கட்டாவில் முக்கிய வணிகப் பகுதியான பாராபஜாரில் ஆயிரக்கணக்கான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் உரிமையாளர்கள் பெரும்பாலும் வேற்று மாநிலத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று அதிகாலை 2.00 மணியளவில் ஜமுனாலால் பஜார் வீதியில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றில் தீ பிடித்தது. அந்தப் பகுதி கட்டடங்கள் அருகருகே அமைந்துள்ள மிக அடர்த்தியானது என்பதால் தீ வேகமாகப் பரவியது.
தகவலறிந்ததும், 40 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த வீரர்கள், பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதிகாலை நேரம் என்பதால் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் யாரும் இல்லை. எனவே, உயிர்ச் சேதம் எதுவும் இல்லை. இருந்தாலும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் எரிந்து நாசமாயின.
தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடந்து வருகிறது.