குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நானாவதி - ஷா குழு, மோடி உள்ளிட்ட 7 பேருக்கு வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராக உத்தரவிடுவது தொடர்பான தனது விசாரணையை வரும் பிப்ரவரி 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இக்குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.டி.நானாவதி, இக்குழுவின் மற்றொரு உறுப்பினரான ஓய்வு பெற்ற நீதிபதி கே.ஜி.ஷா விடுமுறையில் செல்வதைத் தொடர்ந்து இந்த உத்தரவை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா இரயில் பெட்டி எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து நடைப்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட 7 பேர் மீது புகார் கூறப்பட்டது.
வன்முறையாளர்களுக்கும் மோடி, அவரது சகாக்களுக்கும் உள்ளக் தொடர்பு இருப்பதற்கான ஆதாரத்தை ஜனசங்ஹர்ஷ் மஞ்ச் என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு இக்குழுவின் முன் தாக்கல் செய்ததோடு, மோடி உள்ளிட்ட 7 பேருக்கும் அழைப்பாணை அனுப்பக் கோரியது. கோத்ரா சம்பவம் தொடர்பான ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் கடந்த 31 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பிலும் குழுவின் முன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் முதல்வர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ஜடாப்ஃபியா, அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் அசோக் பட், மோடியின் உதவியாளர்கள் ஓம் பிரகாஷ், தான்மேய் மேத்தா, சஞ்சய் பவாசார், அகமதாபாத் நகர 5 -வது மண்டல துணை ஆணையர் ஆர்.ஜே. சவானி ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.