நீர்வளத் துறையில் நடந்து வரும் பல்வேறு ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில், 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் ரூ.295 கோடி ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் ப.சிதம்பரம் இத்தகவலைத் தெரிவித்தார்.
தற்போதுள்ள வசதிகளுடன், நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் வசதிகளை ஏற்றுக் கொள்வதன் மூலம், நீர்வளத் துறையில் உருவாகியுள்ள சவால்களைச் சந்திக்கும் வகையில் நடந்துவரும் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்கு இந்நிதி உதவும் என்று அவர் கூறினார்.
நீர்வள ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சி மையங்கள், கல்வி நிறுவனங்கள், மாநில அரசுகளின் ஆய்வு நிறுவனங்கள் போன்ற அனைத்திற்கும் நிதி வழங்கப்படும் என்றும், இதன் மூலம் நமது ஆராய்ச்சிகளின் பயன்கள் உலகம் முழுவதும் தெரிவிக்கப்படும் என்றும் சிதம்பரம் கூறினார்.