இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், பாரம்பரிய மருத்துவம், கட்டுமானத் துறை, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான 5 ஒப்பந்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் வருகிற 12 முதல் 15 ஆம் தேதி வரை மேற்கொள்ள உள்ள சீனப் பயணத்தின் போது இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இதில், பாரம்பரிய மருத்துவம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், உலகளவிலான தரக் கட்டுப்பாடுகளுக்கு ஏற்றவாறு இரு தரப்பு ஒத்துழைப்பும் மேம்பட உதவும்.
புவியியல் அறிவியல் தொடர்பான ஒப்பந்தம், மண்ணியல் ஆய்வில் இரு தரப்புக்கும் இடையில் நிறுவன ரீதியான கட்டமைப்பை உருவாக்க உதவும்.
ரயில்வேத் துறை தொடர்பான ஒப்பந்தத்தின் மூலம், இந்திய ரயில்வேக்கும் சீன ரயில்வேக்கும் இடையிலான வணிகரீதியான முயற்சிகளை வலுப்படுத்த உதவும். இந்த ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, நிலவள மேலாண்மை, நில நிர்வாகம், கட்டுமானத்துறை ஆகிய துறைகளில் மேலும் 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.