குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் ஆகியோருக்கு ஊதியத்தை இருமடங்கிற்கு மேல் அதிகரிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. இக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ஊதியம் தொடர்பாகப் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதுகுறித்து நாடாளுமன்ற விவாகரத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
குடியரசு தலைவரின் ஊதியம் மாதத்திற்கு ரூ.50,000 த்திலிருந்து ரூ.1,00,000 மாக அதிகரிக்கப்படுகிறது. துணைக் குடியரசுத் தலைவரின் ஊதியம் மாதத்திற்கு ரூ.40,000 த்திலிருந்து ரூ.85,000 மாக உயர்த்தப்படுகிறது.
இதேபோல ஆளுநர்களின் ஊதியமும் மாதத்திற்கு ரூ.36,000 த்திலிருந்து ரூ.75,000 மாக உயர்த்தப்படுகிறது.
இந்த ஊதிய உயர்வுகள் அனைத்தும் 2007 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிப்படி முன் தேதியிட்டு நடைமுறைக்கு வருகிறது.
மேலும், முன்னாள் குடியரசுத் தலைவர்களின் ஓய்வூதியம் ஆண்டுக்கு ரூ.3,00,000 த்திலிருந்து ரூ.6,00,000 மாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இதற்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட குடியரசு தலைவரை விட அதிகமாக ஊதியம் பெற்று வந்தனர். இதைக் கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவரின் ஊதியத்தை உயர்த்த ஒரு ஆண்டுக்கு முன்னரே ஆலோசிக்கப்பட்டது.
ஆனால், சட்டப் பேரவைத் தேர்தல்கள் வந்த காரணத்தினால், இப்போது தான் அதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.