தொகுதி மறுசீரமைப்பு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள 5 மாநிலங்களுக்கு மட்டும் அதிலிருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
நமது நாட்டில் தற்போதுள்ள சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், சில குறிப்பிட்ட மாநிலங்களில் தொகுதிகளை திட்டமிட்டபடி மறுவரையறை செய்ய முடியவில்லை. இதனால் அந்த மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறையை அமல்படுத்துவதில் இருந்து விலக்களிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக நாடாளுமன்றத்தில் சட்ட முன்வரைவு ஒன்றைத் தாக்கல் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.
விதி விலக்கு பெறும் மாநிலங்கள் எவை என்பது குறித்து அரசு தரப்பில் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும், நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், ஜார்கண்ட் ஆகியவை தான் அவை என்று கூறப்படுகிறது.