மின்னணு முறையில் காத்திருப்புப் பயணச் சீட்டை (வெயிட்டிங் லிஸ்ட்) வழங்கும் புதிய வசதியை இரயில்வே அறிமுகம் செய்யவுள்ளது. இந்தப் புதிய திட்டம் வரவிருக்கும் இரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
இரயில்வே முன்பதிவு மையங்களில் பயணிகளின் கூட்டத்தைக் குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை இரயில்வேத் துறை எடுத்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக அறிமுகம் செய்யப்பட்ட மின்னணு பதிவு முறையில் தற்போது, உறுதி செய்யப்பட்ட பயணச் சீட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. காத்திருப்புப் பயணச் சீட்டு வழங்குவதற்கான தொழில்நுட்ப வசதிகள் உருவாக்கப்படவில்லை.
இந்நிலையில், மின்னணு முறையிலும் காத்திருப்போர் பட்டியலை உருவாக்கும் புதிய மென்பொருளை உருவாக்கும் பணியில் இரயில்வேத் துறை ஈடுபட்டுள்ளது. இந்த மென் பொருள் விரைவில் சோதனை முறையில் செயல்படுத்திப் பார்க்கப்படும் என்று இரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
இ-டிக்கெட் எனப்படும் மின்னணு பயணச் சீட்டு முன்பதிவு முறை கடந்த 2006 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி இரயில்வே இணையதளத்தில் பயணச் சீட்டை முன்பதிவு செய்து, அதன் விவரங்களை அச்சிட்டு எடுத்துக் கொள்ளலாம். தற்போது ஆண்டுக்கு 50,000 பயணச் சீட்டுகள் மின்னணு முறையில் பதிவு செய்யப்படுகின்றன.