இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிரேம் குமார் துமால் தலைமையிலான அமைச்சரவையில் 9 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
ஆளுநர் மாளிகையில் இன்று நடந்த விழாவில் அமைச்சர்கள் 9 பேருக்கும் ஆளுநர் வி.எஸ்.கோக்ஜே பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
தாகூர் குலாப் சிங், ஈஸ்வர் தாஸ் திமான், ஜகத் பிரகாஷ் நட்டா, ரவீந்தர் சிங் ரவி, கிஷான் கபூர், நரேந்திரா பிரக்டா, ரமேஷ் துவாலா, ராஜீவ் பின்டால், சர்வீன் சவுத்ரி ஆகியோர் புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களாவர்.
இவர்களுக்கான இலாகா ஒதுக்கீடு பின்னர் முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்புச் சட்டப்படி இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவையில் அதிகபட்சமாக 12 அமைச்சர்கள் வரை இடம்பெற முடியும். தற்போது முதல் அமைச்சர் துமாலையும் சேர்த்து மொத்தம் 10 பேர் பதவியேற்றுள்ளனர்.
முன்னதாக, இமாச்சலப் பிரதேசச் சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. 41 தொகுதிகளைக் கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றது. காங்கிரஸ் 23 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.