இந்தியர்களைப் பணி அமர்த்துவதற்குத் தடை விதிக்கவில்லை என்று மலேசியா மறுத்துள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அயல்நாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறியதாவது :
இந்தியர்களைப் பணியமர்த்துவதற்கு மலேசிய அரசு தடை விதித்துள்ளதாக நேற்று வெளியான தகவல்களால் மிகுந்த கவலை அடைந்தேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை என்று மலேசிய உள்துறை அமைச்சகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. நாங்கள் இதை வரவேற்கிறோம்.
இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையில் உள்ள தொழிலாளர் நல விவகாரங்கள் குறித்து விரைவில் பேச்சு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு வேலைக்கு செல்வோருக்கு மலேசிய அரசு தடை விதித்திருப்பதாக வெளியான செய்திகளை அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரட்ஸி ஷேக் அகமது மறுத்தார்.
இதுபோன்ற தகவல் பற்றி தமக்கு ஏதும் தெரியாது என்றும், அந்த செய்தியால் அரசு மிகவும் கவலை கொண்டிருப்பதாகவும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.