நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே உள்ள நிலையில் அதையும், அதற்கிடையில் நடக்கவுள்ள 9 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களையும் சந்திப்பதற்கு பா.ஜ.க தயாராகி வருகிறது.
தேர்தல்களை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுப்பதற்காக பா.ஜ.க.வின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எல்,கே.அத்வானி, பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் அக்கட்சியின் மூத்த முன்னணித் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் தேர்தல் திட்டங்களைத் தயாரிக்கவும், பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ளவும் 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அதில் முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, பால் ஆப்தே, ராம்லால், கோபிநாத் முண்டே, முக்தர் அப்பாஸ் நக்வி, வினய் கத்தியார், ஜஸ்வந்த் சிங், சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, விஜய் குமார் மல்கோத்ரா, அருண் ஷோரி ஆகியோருடன் அருண்ஜேட்லி உள்பட 6 பொதுச் செயலாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.
பா.ஜ.க. வில் அத்வானிக்கு அடுத்தபடியாக வளர்ந்துவரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு இந்த குழுவில் இடம் அளிக்கவில்லை. மேலும், இந்தக் குழுவில் உள்ளவர்களில் முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா உள்பட 8 பேர் அத்வானிக்கு எதிரானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1998 மற்றும் 1999 ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் அத்வானி தலைமையில் பா.ஜ.க. தேர்தல் குழு அமைக்கப்பட்டது. அந்த இரு தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இப்போது அத்வானியே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரை முன் நிறுத்தி பிரச்சாரத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
இதற்கிடையே பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் முதலமைச்சர்கள் கூட்டம் 22-ஆம் தேதிக்கு மேல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.