தேசிய அளவில் பதிவு செய்யப்பட்ட எல்லாத் தொழிலாளர்களுக்கும் விரைவில் மின்னணு அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்க தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனம் (இ.எஸ்.ஐ.) திட்டமிட்டுள்ளது.
மருத்துவ வசதி மற்றும் பிற சலுகைகளை பெற இந்த மின்னணு அடையாள அட்டையை தொழிலாளர்கள் பயன்படுத்தலாம்.
இந்த திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அவற்றை பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் இ.எஸ்.ஐ. நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
மின்னணு அடையாள அட்டை சேவை திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம், நாடு முழுவதிலும் உள்ள இ.எஸ்.ஐ. கிளைகளில் மின்னணு அடையாள அட்டை பயன்பாடு தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்க வேண்டும்.
தற்போதைய நிலையில் இ.எஸ்.ஐ. திட்டத்தின்கீழ் 91 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மொத்தப் பயனாளிகளாக 3.5 கோடி பேர் உள்ளனர்.
கடைகள், உணவு விடுதிகள், திரையரங்குகள், சாலை போக்குவரத்து நிறுவனங்கள், 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு இயங்கும் பத்திரிகை நிறுவனங்களுக்கும் இ.எஸ்.ஐ. திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, அருணாசலப்பிரதேசம், மிஜோரம் ஆகிய மாநிலங்களில் மட்டும் இ.எஸ்.ஐ. திட்டம் அமலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.