உள்நாட்டு தொழில்நுட்பத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வந்த இந்தியாவின் ஒருங்கிணைந்த வழிகாட்டு ஏவுகணைத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது!
புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஏவுகணை உருவாக்கம் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் மூத்த விஞ்ஞானியான பிரகலாதா இத்தகவலை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த ஏவுகணைத் திட்டத்தின் கீழ் இந்தியா உருவாக்கிய நீண்டதூர ஏவுகணை, கடலிற்கடியில் ஏவப்படும் ஏவுகணை, ஏவுகணையை இடைமறித்து அழிக்கும் ஏவுகணை ஆகியவற்றின் சோதனைகள் பயிற்சிக் கூடத்திலேயே சோதித்து மேம்படுத்தப்படும் என்று விஞ்ஞானி பிரகலாதா கூறியுள்ளார்.
இதற்குமேல் இந்தியாவின் ஏவுகணைத் திட்டங்கள் அனைத்தும் அயல்நாடுகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் என்று பிரகலாதா கூறியுள்ளார்.
தனியார் ஒத்துழைப்புடன் குறைந்த செலவில் 5 ஆண்டு திட்ட காலத்தில் புதிய ஏவுகணைகளும், ஆயுதங்களும் உருவாக்கப்படும் என்று அவர் கூறினார்.
ஹைதராபாத்தில் இயங்கிவரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைமைக் கட்டுப்பாட்டாளரா விஞ்ஞானி பிரகலாதா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தரையில் இருந்து விண் இலக்குகளைத் தாக்கவல்ல ஸ்பைடர் ஏவுகணைகளை இஸ்ரேலுடனும், மற்றொரு ஏவுகணையான அஸ்த்ராவை ·பிரான்ஸ் மற்றும் ரஷ்ய ஒத்துழைப்புடனும் இந்தியா உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.