இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவின் அணு உலைகளை கண்காணிப்பது தொடர்பாக தனித்த உடன்படிக்கை ஏற்படுத்த சர்வதேச அணு சக்தி முகமையுடன் (IAEA) இந்தியா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை!
இத்தகவலை சர்வதேச அணு சக்தி முகமை வட்டாரங்கள் தெரிவித்ததாக பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.
இந்தியா, அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒப்பந்தத்தின் படி, சர்வதேச அணு சக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும் அணு சக்தி உலைகள், அவைகளின் வாழ்நாள் முழுவதும் இயங்குவதற்குத் தேவையான யுரேனியம் எரிபொருளை இருப்பில் தேக்கி வைத்துக் கொள்வதை சர்வதேச அணு சக்தி முகமை ஏற்காததையடுத்து, கண்காணிப்பு உடன்படிக்கை இறுதி செய்யப்படவில்லை என்று அச்செய்தி கூறுகிறது.
இதுமட்டுமின்றி, அணு உலைகளுக்கு அளிக்கப்படும் யுரேனியம் எரிபொருள் நிறுத்தப்படும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்று ஏற்பாடுகள் குறித்தும் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, சர்வதேச அணு சக்தி முகமையுடன் மேலும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது இந்திய அணு சக்தித்துறை.