புது டெல்லியில் வசிப்பவர்கள் கட்டாயமாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், திடீரெனத் தனது உத்தரவிலிருந்து பின்வாங்கும் விதமாக 'அடையாள அட்டை கட்டாயமில்லை' என்று துணைநிலை ஆளுநர் தேஜேந்திர கண்ணா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அடையாள அட்டை கட்டாயம் என்று நான் எப்போதும் கூறவில்லை. செய்தி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. அடையாள அட்டை இல்லாத மக்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள் என்று நான் கூறவில்லை. நம் நாடு சுதந்திரமான நாடு. அதன் குடிமக்களில் எவரும் பாதிக்கப்படக் கூடாது'' என்றார்.
மேலும், ''சந்தேகத்திற்குரிய யாரும் தப்பிவிடக் கூடாது என்ற நோக்கத்தில், பாதுகாப்பை அதிகரிக்குமாறு காவல்துறை ஆணையருக்கு அறிவுறுத்தல் கொடுத்தேன். ஜனவரி 15 ஆம் தேதி முதல் அடையாள அட்டை கட்டாயம் என்பது தவறான தகவல் ஆகும்.'' என்றும் அவர் கூறினார்.