மலேசிய விமானப் படையினருக்கு ரஷ்யாவின் சுகோய்-30 விமானங்களை இயக்கப் பயிற்சி தருவதற்கும், அந்நாட்டு ராணுவத்துடன் இணைந்து அதிக எண்ணிக்கையிலான கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.
மலேசியாவிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, அங்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் நாஜிப் ரசாக்கைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
இந்தியாவும் மலேசியாவும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்ள விரும்புகின்றன. தகவல் தொழில்நுட்ப உதவி, இணைத் தயாரிப்பு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில், ராணுவத் தளவாடத் தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் உருவாகும்.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் அடிப்படையில், ராயல் மலேசியன் விமானப்படை அதிகாரிகள் மற்றும் பைலட்டுகளுடன் இந்திய ராணுவப் படையினர் இரண்டாவது கட்டக் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக இந்தியாவைச் சேர்ந்த 31 விமானப் படை அதிகாரிகள் அடுத்த மாதம் மலேசியாவிற்கு வருகின்றனர். மலேசியாவில் நீண்டகாலம் தங்கியிருக்கப் போகும் அவர்கள், மலேசிய விமானப் படை பைலட்டுகளுக்கு ரஷ்யாவின் சுகோய்-30 விமானங்களை இயக்கப் பயிற்சி அளிப்பார்கள்.
முன்னதாக, இந்திய விமானப் படை ஏற்பாடு செய்திருந்த முதல் கட்டக் கூட்டுப் பயிற்சி கடந்த மாதம் முடிந்தது.
இரு நாடுகளும் பாதுகாப்புத் துறையில் ஒருங்கிணைந்து செயலாற்றுவதன் மூலம், பயங்கரவாத எதிர்ப்புப் போரில் அளப்பறிய பங்காற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.