பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாத காங்கிரஸ் கட்சி தம்மை ஒழித்துவிட திட்டமிட்டுச் செயல்பட்டு வருவதாக குற்றம் சாற்றியுள்ள உ.பி. முதல்வர் மாயாவதி, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தமது கட்சி அளித்து வரும் ஆதரவைத் தொடருவதா, அல்லது விலக்கிக் கொள்வதா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தம்மைக் கொல்ல ஆட்டிக் அகமது போன்ற மாஃபியா தீவிரவாதிகள் முயன்று வருவதாகவும், அவர்களுக்கு மத்திய அரசு டெல்லியில் பாதுகாப்பாக தங்க வசதி செய்து கொடுத்துள்ளதாகவும் மாயாவதி குற்றம் சாற்றியுள்ளார். மேலும் தம் மீது போலியாக வருமான வரி வழக்குகளை மத்திய புலனாய்வுத் துறையைக் கொண்டு புனையச் செய்து, தம்மை சிக்கலுக்கு உள்ளாக்க காங்கிரஸ் முயன்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மிகவும் பின் தங்கிய பகுதிகளான பூர்வாஞ்சல், ப்ண்டல்கண்டு ஆகிய பகுதிகளின் மேம்பாட்டிற்காக 11 -வது திட்டக் காலத்தில் சிறப்புத் திட்டங்களை மேற்கொள்ள மாநில அரசு கேட்ட ரூ.80,000 கோடி பொருளாதார நிதிஒதுக்கீடு வழங்காததையும் மாயாவதி குறை கூறியுள்ளார். மேலும் தமக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்காததையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
உ.பி. அரசுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளையும், தமது கட்சி கூர்ந்து கவனித்து வருவதாகவும், தற்போது நிலவும் சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 15 ஆம் தேதிக்கு பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் விவாதிக்க இருப்பதாகவும் மாயாவதி தெரிவித்துள்ளார். அந்தக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவு குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
முன்கூட்டியே இது தொடர்பான முடிவை தமது கட்சி எடுக்க முடியாமல் போவதற்கு காரணம், தமது பிறந்த நாளைக் கொண்டாட கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளது தான் என்றும் அவர் கூறியுள்ளார். அண்மையில் நடைப்பெற்ற குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோற்றுப் போனதற்கு எங்கள் கட்சி மீது காங்கிரஸ் குற்றம் சாற்றியுள்ளது. ஆனால் தோல்விக்கு உண்மையான காரணம் அக்கட்சியில் நிலவும் குறைகாடுகளே என்று மாயாவதி சுட்டிக் காட்டியுள்ளார்.
அண்மையில் நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் குஜராத்தில் 2.75 விழுக்காடும், இமாச்சலப் பிரதேசத்தில் 7.5 விழுக்காடு வாக்குகளையும், ஒரு தொகுதியிலும் வெற்றியும் பெற்றுள்ளோம். உண்மையைச் சொல்லப்போனால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு நாடு முழுவதும் வாக்கு வங்கி அதிகரித்து வருவதாகவும், காங்கிரஸ் கட்சிளின் நிலை மோசமான நிலையில் இருந்து படுமோசமடைந்து வருவதாகவும் மாயாவதி கூறியுள்ளார்.
தமது கட்சி தேசியக் கட்சி என்றும், தேர்தலின் போது யாரையும் பாதிப்புக்கு உள்ளாக்காத வகையிலும், அதே நேரத்தில் ஆதரவான நிலையை மேற்கொள்ளாமலும், எங்கள் கட்சியின் இயல்புடனேயே வளர்ச்சியடைந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி, முன்பு பா.ஜ.க. தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சியில் இருந்த போது நடந்து கொண்டதைப் போன்றே அரசியல் நெருக்கடி காரணமாக தற்போது நடந்துக் கொள்ள தொடங்கியிருப்பதாக மாயாவதி குற்றம் சாற்றியுள்ளார்.