இந்திய- சீன எல்லைப் பிரச்சனை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையில் நடந்து வரும் பேச்சுகள் தனக்கு மிகவும் திருப்தியளிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியிலிருந்து இன்று பிரதமர் மன்மோகன் சிங், செய்தியார்களிடம் கூறியதாவது:
இந்திய, சீன உறவுகள் மிகவும் வலுவாக உள்ளன. இரு தரப்புக்கும் இடையில் உள்ள எல்லைப் பிரச்சனை மிகவும் சிக்கலானது. அதைச் சுமூகமாகத் தீர்ப்பதற்கான பேச்சுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதுவரை நடந்துள்ள பேச்சுகள் எனக்கு மிகவும் திருப்தியளிக்கிறது. பேச்சுகள் தொடர்ந்து நடக்கும்.
இந்தப் பயணம் ஒரு சாதாரண அரசுமுறைப் பயணம்தான். சீனாவின் அதிபர் ஹூ ஜிந்தாவோ, பிரதமர் வென் ஜியாபாவோ ஆகியோர் இந்தியா வந்தபோது விடுத்த அழைப்பை ஏற்று சீனா செல்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாகப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சீனப் பயணத்தின் போது, இந்திய- சீன எல்லைப் பிரச்சனையில் குறிப்பிடத்தக்க பெரிய மாற்றம் எதுவும் ஏற்படாது என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.