தலைநகர் டெல்லியில் இன்று காலை கடுமையான மூடுபனி பொழிந்ததினால், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 20 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு பாதிக்கப்பட்டது.
வட மாநிலங்கள் முழுவதும் கடந்த சில நாட்களாகக் கடும் பனிப் பொழிவு இருந்து வருகிறது. இமாச்சலப் பிரதேசம், ஜம்மு- காஷ்மீர் மாநிலங்களில் பனிப் பொழிவினால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் இன்று காலை 9.00 மணி வரை மூடுபனி கொட்டியது. முக்கியச் சாலைகளில் குறைந்தபட்ச பார்வை தூரம் 300 மீட்டருக்குக் குறைவாகவே இருந்ததால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஓடு பாதைகள் தெரியாத காரணத்தால், 20 க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீநகர் நெடுஞ்சாலை திறப்பு
பனிப் பொழிவினால் மூடப்பட்டிருந்த ஸ்ரீ நகர்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலை இன்று மீண்டும் போக்குவரத்திற்குத் திறக்கப்பட்டது.
சாலையை மூடியிருந்த பனிக்கட்டிகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டு விட்டதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருந்தாலும், ஸ்ரீ நகர் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக இன்றும் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.