'காலத்திற்கு ஏற்றவாறு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மாறிவரும் எங்களை மக்களும், அரசியல் கட்சிகளும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
கொல்கட்டாவில், மேற்குவங்க தொழில்துறை அமைச்சர் நிருபம் சென் எழுதிய 'பிகால்பெர் சந்தனே' என்ற புத்தகத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநிலச் செயலர் பீமன் போஸ் வெளியிட்டார்.
அப்போது பேசிய நிருபம் சென், "விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் இணைந்து அவர்களின் நலன்களுக்காக பாடுபடவே நாங்கள் முயற்சித்து வருகிறோம். கடந்த 30 ஆண்டுகளில் நாங்கள் கடந்துவந்த பாதையைப் பார்க்கையில், ஒவ்வொரு நாளின் தேவைக்குத் தகுந்தவாறு நாங்கள் மாறி வந்துள்ளது தெரியும்.
இந்த மாற்றங்களின் மூலம் நாங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு உள்ளோம். நாங்கள் கடந்து வந்துள்ள பாதையில் ஏற்றுக் கொண்டுள்ள மாற்றங்களுக்கான சரியான விளக்கத்தை எனது புத்தகத்தில் கட்டுரைகளாக எழுதியுள்ளேன்." என்றார்.
பின்னர் பேசிய பீமன் போஸ், "தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் ஆண்டுவரும் காலத்தில் தனித்து நிர்ப்பது முடியாத காரியம். ஆனால், மக்கள் நலன் சார்ந்த மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கும் முயற்சியில் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து ஈடுபடும்.
நாங்கள் எங்களுக்குரிய கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகிறோம். அதனால், மக்களும், எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் உட்பட மற்ற எதிர்க்கட்சிகளும் எங்களைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.
நாங்கள் எவ்வாறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மக்களுக்காக உழைக்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொள்வதற்கு நிருபம் சென்னின் கட்டுரைகள் உதவும்" என்றார்.