Publish Date: Mon, 07 Jan 2008 (11:42 IST)
Updated Date: Mon, 07 Jan 2008 (11:41 IST)
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாத வரை மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
திரிபுரா தலைநகர் அகர்தலாவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடந்த பேரணியைத் துவக்கி வைத்துப் பேசிய அவர், தேச நலனுக்கு எதிரான அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
"ஐக்கிய முற்போக்குக் கூட்டணி- இடதுசாரிகள் உயர்மட்டக் குழுவின் அடுத்த கூட்டத்தில், மத்திய அரசு தங்களின் இறுதி நிலையை தெளிவுப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான், சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சு நடத்த அனுமதித்துள்ளோம். சர்வதேச அணுசக்தி முகமையுடன் எந்தவிதமான ஒப்பந்தத்திலும் எங்கள் அனுமதியின்றி மத்திய அரசு கையெழுத்திடாது" என்றார் யெச்சூரி.