பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சி மிகவும் அவசியம் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
இது குறித்து கான்பூரில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிகரித்து வரும் பயங்கரவாதம் மத்திய அரசு, மாநில அரசுகள் ஆகிய இரண்டு தரப்புக்குமே கவலை அளிப்பதாக உள்ளது. நமது நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டுமானால் இரு தரப்பும் இணைந்து முயற்சிக்க வேண்டும். அதைவிடுத்து இச்சிக்கலை அரசியலாக்கக் கூடாது.
உத்தரபிரதேசத்தில் நடக்கும் தாக்குதல்களுக்கு மத்திய அரசைக் குற்றம்சாற்றுவதை மாயாவதி வழக்கமாகக் கொண்டுள்ளார். மாயாவதி மட்டும்தான் இப்பழக்கத்தை வைத்துள்ளார். இது உத்தரபிரதேசத்திற்கு மட்டுமல்ல, தேசத்திற்கே ஆபத்து விளைவிக்கும் போக்காகும்.
இவ்வாறு அவர் கூறினார்.