தற்போதுள்ள சூழலில் சோசலிசம் வருவதற்குச் சாத்தியமில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசு கூறியுள்ளார்.
இது குறித்து கொல்கட்டாவில் இன்று செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:
எங்களின் கட்சி அறிக்கையில் சோசலிசம் உருவாகும் காலம் பற்றித் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை மேற்குவங்கத்தில் எங்கள் அரசியல் தீர்மானமாகவும் முன்வைத்துள்ளோம். ஆனால் எதிர்காலத்தின் கட்டாயத்தினால் முதலாளித்துவம் தொடரும் என்று தோன்றுகிறது.
ஏனெனில், தற்போதைய சூழலில் மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக எங்களுக்கு உள்நாட்டு, அயல்நாட்டு மூலதனங்கள் தேவைப்படுகிறது. அதற்காக நாங்கள் முதலாளித்துவ அடிப்படையில்தான் செயல்பட வேண்டியுள்ளது. இதனால் சோசலிசம் தற்போதைக்குச் சாத்தியமில்லை.
வர்க்கபேதம் இல்லாத சமூகத்தை உருவாக்குவது பற்றி நாங்கள் பேசினோம். ஆனால் அது வெகு காலத்திற்கு முன்புவரை மட்டுமே.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நமது நாட்டில் 3 மாநிலங்களில் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி உள்ளதைச் சுட்டிக்காட்டிய ஜோதிபாசு, "இந்தக் குறைவான வளர்ச்சியின் அடிப்படையில் நாங்கள் சோசியலிசத்தை நிறுவப் போகிறோம் என்று எங்களால் அறிவிக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.