சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில், மத்திய அரசின் சார்பில் புதிய வாக்குமூலத்தை தாக்கல் செய்வது பற்றி, பிரதமர் மன்மோகன் சிங்குடன் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி ஆலோசனை நடத்தினார்.
பிரதமரிடம், புதிய வாக்குமூலத்தில் உள்ள விவரங்கள் பற்றி அம்பிகா சோனி விரிவாக எடுத்துரைத்தார் என்று கலாச்சாரத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மிகவும் கவனமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய வாக்குமூலத்தில், உண்மை நிலை அடிப்படையில் விவரங்கள் தரப்பட்டுள்ளதாகவும், தேசிய முற்போக்குக் கூட்டணிஅட்சி காலத்தில் இத்திட்டத்திற்கு அளிக்கப்பட்ட விளக்கங்கள் ஆதாரமாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், உச்ச நீதிமன்றத்தில் இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வாக்குமூலத்தில், கடவுள் ராமனின் உண்மைத் தன்மை குறித்துக் கேள்வி எழுப்பியிருந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இதையடுத்து, ஹிந்து அமைப்புகளின் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு அந்த வாக்குமூலத்தை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.
இதற்கிடையில் வந்த குஜராத், இமாச்சலப் பிரதேசச் சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரசை வீழ்த்தி பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றது.
இதனால், ராமர் விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுவிடக் கூடாது என்ற விடயத்தில் மத்திய அரசு மிகவும் கவனமாக உள்ளது.