ஜம்மு காஷ்மீரில், பேருந்தில் ஆயுதங்களைக் கடத்திய தீவிரவாதிகள் 3 பேரை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வடக்கு காஷ்மீரில் எல்லை நகரமான யூரியில், ராணுவத்தினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த பேருந்தில் பயணம் செய்த சிலரைச் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட போது, அவர்கள் ஆயுதங்களைக் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து, முகமது ரஃபீக், அப்துல் மஜீத், முக்தியார் அகமது ஆகிய 3 தீவிரவாதிகள், 330 சுற்று ஏ.கே. 47 துப்பாக்கி குண்டுகளுடன் கைது செய்யப்பட்டனர். இவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் தெரியவில்லை.
இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஒரு வீட்டிலிருந்து 235 சுற்று கைத் துப்பாக்கி குண்டுகள், 386 சுற்று ஏ.கே. 47 துப்பாக்கி குண்டுகள், 24 சுற்று இயந்திரத் துப்பாக்கி குண்டுகள், ஏராளமான துப்பாக்கிகள் என பெருமளவிலான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல மணிப்பூரிலும் ஆயுதங்களைக் கடத்திய தீவிரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
மக்கள் புரட்சி இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த அவனின் பெயர் விவரத்தை ராணுவத்தினர் வெளியிடவில்லை. ஆனால் அவனிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 4 கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.