தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற அக்ஷர்தாம் கோயிலை வெடிகுண்டு மூலம் தகர்க்கத் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து அக்கோயிலின் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அக்ஷர்தாம் கோயிலைத் தகர்ப்பதன் மூலம் டெல்லியில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று காஷ்மீர் தீவிரவாதிகள் சிலர் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து அக்ஷர்தாம் கோயிலுக்குச் சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கோயிலைச் சுற்றிலும் வெடிகுண்டு வல்லுநர்கள் இன்று காலை முதல் தீவிரமாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கோயில், உலகிலேயே மிகப்பெரிய ஹிந்துக் கோயில் என்ற அடிப்படையில் அண்மையில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.