தற்போதுள்ள அரசியல் நெருக்கடிகள் தீர்ந்து நிலையான, வலிமையான பாகிஸ்தான் விரைவில் உருவாக வேண்டும் என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் தற்போது நிலவும் அரசியல் சூழலில், அங்குள்ள அணு ஆயுதங்கள் மத அடிப்படைவாதிகளின் கைகளில் சிக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று மேற்கத்திய ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பாக புது டெல்லியில் இன்று அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அணு ஆயுதங்கள் தவறானவர்களின் கைகளில் சிக்குவது என்பது அனைவருக்கும் கவலை தரக்கூடிய விடயம்தான்.
தற்போதுள்ள சூழலில் அதிபர் முஷாரஃப் தான் அதிகார பீடத்தில் உள்ளார். அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பும் அவரிடம்தான் உள்ளது என்று நினைக்கிறேன். அவர் அதைப் பொறுப்புடன் கையாள வேண்டும்" என்றார்.
பாகிஸ்தான் வரலாற்றை அறிந்தவர்களுக்கு, அந்நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தெரியும் என்ற பிரணாப் முகர்ஜி, அந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு ஏற்ற அரசியல் சூழ்நிலைகள் நிச்சயம் உருவாகும் என்றார்.