வட இந்தியாவில் பெய்யும் கடுமையான பனிப்பொழிவுக்கு இதுவரை 90 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
உத்திரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 72 பேரும், குஜராத்தில் 8 பேரும் பீகார், பஞ்சாபில் தலா நான்கு பேரும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் 2 பேரும் பலியாகியுள்ளனர். இந்த பனிக் காலத்தில் மிகவும் குறைந்த பட்சமாக டெல்லியில் இன்று காலை 1.9 டிகிரி செல்ஷியஸாக இருந்தது.
டெல்லியின் நேற்றைய வெப்ப நிலை 5 டிகிரிக்கும் குறைவாக இருந்தது. உத்திரப் பிரதேசத்தில் மிக அதிக அளவு பேர் பலியானதற்கு, அங்கு பெரும்பாலான இடங்களில் வெப்ப நிலை இயல்புக்கும் குறைவாக 2 முதல் 5 டிகிரி என்ற அளவில் நீடிப்பதே காரணம். ஆக்ரா, கோரக்பூர், வாரணாசி, பைசாபாத், லக்னோ, ரே பரேலி மண்டலங்களில் இரவு வெப்பநிலை மிகவும் குளிராக காணப்பட்டது.
இந்த கடுமையான பனிப்பொழிவு ஹரியானா மாநிலத்திலும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. வெப்பநிலை இயல்புக்கும் குறைவாக 4 முதல் 8 டிகிரி குறைந்து காணப்பட்டது. இந்த பனிப்பொழிவு ஹிமாச்சலப் பிரதேசத்தின் குலூ சமவெளி, உன்னாவ் ஆகிய பகுதிகளிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தால் ஏரி பூஜ்யத்துக்கும் கீழ் 7 டிகிரிஅளவுக்கு குறைந்துள்ளதால் உறைந்து காணப்படுகிறது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் கதும் பனியால் இங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 4,5 கம்பளிகளைப் போர்த்திக் கொண்டு கூட மாலை நேரங்களில் வெளியில் வர முடியாத அளவுக்கு பனிப்பொழிவு உள்ளது. மின் தடை பெரும்பாலான இடங்களில் நிலவுவதால் விறகுகளின் விலை குவிண்டாலுக்கு ரூ.500 என்ற அளவில் விற்கப்படுகிறது. மணிப்பூர் மாநிலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.7 டிகிரியாகவும், அதிகபட்ச வெப்பநிலை 24.2 டிகிரி செல்ஸியசாகவும் உள்ளது.
உறை நிலை பனி நிலவுவதால் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சூரு பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இயல்புக்கும் குறைவாக 5 டிகிரி குறைவாக மைனஸ் 1 டிகிரியாக உள்ளது. ஜலந்தரில் மைனஸ் 3 டிகிரியாக வெப்பநிலை உள்ளது.
வட மாநிலங்களில் வெய்யும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலைகள், இரயில் பாதைகளில் பனிகட்டிகள் உறைந்து காணப்படுவதால் பேருந்து, இரயில் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப் பட்டள்ளது. கடும் பனிப்பொழிவில் இருந்து ஏழை - எளிய மக்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.