ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கோயில் நெரிசலில் சிக்கி பக்தர்கள் 6 பேர் பலியாயினர். 20 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோயிலில் இன்று காலை பவானி தீக்ஷை திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்ளவந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றாக தரிசனத்திற்கு கூடியபோது நெரிசல் ஏற்பட்டது.
இந்த நெரிசலில் சிக்கி 5 பெண்களும் ஒரு குழந்தையும் பலியாயினர். 20 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதில் பெண் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் விஜயவாடா எம்.பி. ராஜகோபால், எம்.எல்.ஏ ராஜசேகர் ஆகியோர் விரைந்து வந்து, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
இச்சம்பவத்திற்குக் காரணமாக கோயில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர மாநில உள்ளாட்சி அமைச்சர் ரத்னாகர் ராவ் தெரிவித்தார்.
இதற்கிடையில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10,000 மும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.