நாகாலாந்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
புது டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் குடியரசு தலைவருக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாகாலாந்து முதல்வர் நிப்யூ ரியோ எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
"ஜனநாயகமான முறையில் நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த எனக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பது சட்டவிரோதமானது"என்று அவர் கூறினார்.
நாகாலாந்தில் தற்போது பா.ஜ.க. ஆதரவு பெற்ற நாகாலாந்து ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ளது. இக் கூட்டணி அரசுக்கு எதிராக ஊழல் புகார்கள் கிளம்பியதையடுத்து இரண்டு அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும் பதவி விலகினர். இதனால் ஆளும் நாகாலாந்து ஜனநாயகக் கூட்டணியின் பெரும்பான்மை சரிந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் 13 ஆம் தேதி, அம்மாநில எதிர்க்கட்சிகள் மாநில அரசுக்கு எதிராகக் கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.