Publish Date: Wed, 02 Jan 2008 (17:36 IST)
Updated Date: Wed, 02 Jan 2008 (17:36 IST)
பாகிஸ்தானில் நிலவிவரும் அரசியல் நெருக்கடி குறித்து மிகுந்த கவலை தெரிவித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, அந்நாட்டில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என்று இந்தியா விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாகத் திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இந்தியா- பாகிஸ்தான் இடையில் பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் தொடர்பான பேச்சுக்கள் நடந்து வருவதால், பாகிஸ்தானில் கூடிய விரைவில் அமைதி திரும்ப வேண்டியது அவசியம்" என்றார்.
அதேநேரத்தில், பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தான் எந்தக் கருத்தையும் கூற முடியாது என்று அவர் மறுத்துவிட்டார்.
மேலும், "அயல் பாதுகாப்பைவிட உள்நாட்டுப் பாதுகாப்புக்கு நாம் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆதிவாசிகள், பின்தங்கிய சமூகத்தினர் ஆகியோரை சமூகத்தில் நல்ல நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம், நக்சலிசத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் அந்தோணி.