குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்களுக்கும், 20 மைக்ரான்கள் வரை உள்ள பாலிதீன் பைகளுக்கும் சத்தீஷ்கர் மாநில அரசு தடை விதித்துள்ளது.
குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தால் அவர்களுக்கு 6 மாதம் முதல் 3 வருடம் வரை சிறை தண்டனையும், 1000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களுக்கு அதிகமாக அடிமையாகின்றனர் என்பதால், இன்றிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு இந்த தடை நீடிக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
மேலும், சுற்றுச் சூழலை காக்கும் பொருட்டு 20 மைக்ரான்கள் வரையுள்ள பாலிதீன் பைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தடை உத்தரவுகளை கடுமையாக அமல்படுத்துமாறு சத்தீஷ்கர் முதல்வர் ராமன் சிங், மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
குட்கா, பாலிதீன் பைகள் போன்றவற்றை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது என்றும், அதற்குத் தகுந்த சட்டப்படியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.