மேற்குவங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் உள்ள பெஸ்ரா கிராமத்தில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பாலன் குமார் என்பவரை, மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றதால் அம்மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது.
இன்று அதிகாலை தனது வீட்டிலிருந்த பாலன் குமாரை வெளியில் அழைத்த மாவோயிஸ்டுகள், அவரை அருகில் உள்ள மரத்தில் கட்டிப்போட்டு சித்ரவதை செய்த பின்பு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
சத்தம்கேட்டுப் பொதுமக்கள் வருவதைக் கண்ட மாவோயிஸ்ட்டுகள் ஜார்கண்ட் மாநில எல்லையை நோக்கித் தப்பிச் சென்றதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து புருலியா மாவட்டம் முழுவதும் முழு அடைப்பிற்கு மார்க்சிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.