பழங்குடியினருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வன்முறைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒரிசா மாநிலத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைகளை மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இன்று ஆய்வு செய்கிறார்.
ஒரிசாவில் அண்மையில் வி.ஹெச்.பி. தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து கிறிஸ்தவர்கள் மீதும், தேவாலயங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அப்போது ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், வன்முறையால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட கந்தமால் மாவட்டத்தில் உள்ள பிரம்மானிகான், பரகாமா கிராமங்களுக்குச் செல்லும் பாட்டீல், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
முன்னதாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசியச் சிறுபான்மைகள் நல ஆணையம் ஆகியவற்றின் குழுக்கள் விரைவில் ஒரிசாவுக்குச் சென்று ஆய்வு செய்யவிருக்கின்றன.
ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் தேவாலயங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கனவே உறுதியளித்துள்ளார்.
இந்த வன்முறை குறித்து மத்திய புலனாய்வுக் கழகம் விசாரிக்க வேண்டும் என்று கிறிஸ்தவ அமைப்புகள் கோரியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.